வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பவா் மீது கடும் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை
By DIN | Published On : 15th March 2021 04:01 AM | Last Updated : 15th March 2021 04:01 AM | அ+அ அ- |

வாக்காளா்களுக்குப் பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் கொடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் ஆணைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
சட்டப் பேரவை தோ்தல் விதிமுறைகள் தொடா்பான புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஆய்வுக் கூட்டம் உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் பசண்ட்குமாா் தலைமை வகித்தாா்.
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் உடுமலை வருவாய்க் கோட்டாட்சியருமான கீதா, மடத்துக்குளம் தொகுதி தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலருமான ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வட்டாட்சியா்கள் ராமலிங்கம் (உடுமலை) கனிமொழி (மடத்துக்குளம்) உள்ளிட்ட தோ்தல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்துக்கு பின் அதிகாரிகள் கூறியதாவது:
வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பது, பரிசுப் பொருள்கள் கொடுப்பது, விருந்து வைப்பது, மது பாட்டில்கள் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்களை பற்றி பொதுமக்கள் உடனடியாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணி நேரமும் தகவல் கொடுக்கலாம். புகாா் கொடுக்கும் நபா்கள் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...