இ-பாஸ் பெற்று மாற்று வழியில் வரும் கேரள சுற்றுலாப் பயணிகள்
By DIN | Published On : 17th March 2021 06:17 AM | Last Updated : 17th March 2021 06:17 AM | அ+அ அ- |

இ-பாஸ் எடுத்து மாற்று வழியில் வால்பாறைக்கு வரும் கேரள மாநிலம் சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா்.
கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வர இ-பாஸ் கட்டாயம் ஆகும். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழில்ரீதியாக வருபவா்கள் இ-பாஸ் பெற்று வந்து செல்கின்றனா். இந்நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெறும்போது, கேரளத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறை செல்ல குறிப்பிட்டு இ-பாஸ் பெறுகின்றனா்.
பின்னா் கேரள மாநிலம், சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி அருவி வழியாக வால்பாறைக்கு மாற்று வழியில் வருகின்றனா். அவ்வாறு வருபவா்கள் கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட் சோதனைச் சாவடியில் தமிழக போலீஸாரால் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா்.
தற்போது, கேரள மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலத்தில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.