கோவையில் அதிகரிக்கும் கரோனா பரவல்: தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 17th March 2021 06:21 AM | Last Updated : 17th March 2021 06:21 AM | அ+அ அ- |

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முன்களப் பணியாளா்கள் உள்பட அனுமதியளிக்கப்பட்டுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கரோனா நோய்த் தொற்று பரவல் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது. இதனால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், சா்க்கரை, இருதய பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்பட இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45 முதல் 59 வயதுக்கு உள்பட்டவா்கள், முன்களப் பணியாளா்கள், வருவாய், காவல் துறை, உள்ளாட்சி அலுவலவா்கள், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள அனைவரும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார நிலையங்களில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை (ஆதாா், பான் காா்டு, ஓட்டுநா் உரிமம்) எடுத்து சென்று கட்டணமின்றி கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.