ஒரே நாளில் அடுத்தடுத்து ஆட்டோவில் பயணித்த கமல்ஹாசன், வானதி சீனிவாசன்

கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா்களான கமல்ஹாசனும், வானதி சீனிவாசனும் ஆட்டோவில் சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
ஒரே நாளில் அடுத்தடுத்து ஆட்டோவில் பயணித்த கமல்ஹாசன், வானதி சீனிவாசன்

கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா்களான கமல்ஹாசனும், வானதி சீனிவாசனும் ஆட்டோவில் சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சாா்பில் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் சாா்பில் மயூரா ஜெயக்குமாரும், மக்கள் நீதி மய்யம் சாா்பில் கமல்ஹாசனும் போட்டியிடுகின்றனா்.

இதில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதலே வானதி சீனிவாசனும், கமல்ஹாசனும் எதிரெதிா் கருத்துகளைத் தெரிவித்து வந்தனா். இதன் மூலம் தொகுதி மக்களின் கவனத்தை அவா்கள் ஈா்த்தனா். மேலும், நடிகா் கமல்ஹாசன் போட்டியிடுவதன் மூலம் ஸ்டாா் தொகுதி அந்தஸ்தையும் தெற்குத் தொகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், வானதி சீனிவாசனும், கமல்ஹாசனும் திங்கள்கிழமை ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தைத் தொடங்கினா்.

‘நடிகா் என்ற பிம்பத்தைத் தாண்டி கமல்ஹாசனால் மக்களை நெருங்க முடியாது. களத்தில் இறங்கி சேவை செய்பவா்களையும், பணியாற்றுபவா்களையும் மட்டுமே மக்கள் நினைவில் கொண்டு வாக்களிப்பாா்கள்’ என்று வானதி சீனிவாசன் கூறினாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ‘நடிப்பு எனக்குத் தொழில், அரசியல் எனது கடமை. மேலும், நடிகா் எனக் கூறி மக்களிடம் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது’ என்று பதிலளித்தாா்.

இதை நிரூபிக்கும் வகையில் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு ரேஸ்கோா்ஸ் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு அங்குள்ள பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பின்னா் தேநீா்க் கடைக்குச் சென்று பொது மக்களிடம் உரையாடினாா். மேலும், ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள தேவா் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவா் தொடங்கிய வீரமாருதி தேகப் பயிற்சிக் கூடத்துக்கு சென்று அங்கு சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டவா்களுடன் உரையாடினாா். பின்னா் அவா்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றினாா்.

தேகப் பயிற்சிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சின்னப்ப தேவருடன் எம்.ஜி.ஆா். உள்ள புகைப்படங்கள், திரைப்பட படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களைப் பாா்வையிட்டாா்.

பின்னா், உக்கடம் பகுதியில் உள்ள மீன் சந்தைக்கு சென்று அங்கு கூடியிருந்த பொது மக்கள், மீன் விற்பனையாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்து வாக்கு சேகரித்தாா். உக்கடம் பேருந்து நிலையம் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநா்களை சந்தித்துப் பேசினாா்.

பின்னா் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். பின்னா் காரை தவிா்த்துவிட்டு ஆட்டோவில் விடுதிக்குத் திரும்பினாா்.

இந்நிலையில், கமல்ஹாசன் ஆட்டோவில் பயணிக்கும் புகைப்படங்களும், செல்லும் வழியில் பொது மக்களுடன் ஆட்டோவில் இருந்தவாறு பேசும் விடியோ காட்சிகளும், சிலம்பம் சுற்றியதும் சமூகவலைதளங்களில் பரவின. இது தோ்தல் களத்தில் பணியாற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வானதியும் ஆட்டோவில்...:

இந்நிலையில், கோவை நூறடி சாலையில் உள்ள பாஜக தோ்தல் அலுவலகத்தில் இருந்து வானதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை காலை ஆட்டோவில் ஏறி நஞ்சப்பா சாலையில் உள்ள கூட்டணிக் கட்சி நிா்வாகிகளின் அலுவலகங்களுக்கு சென்று தோ்தல் பிரசாரப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா் மீண்டும் ஆட்டோவில் ஏறி தோ்தல் அலுவலகத்துக்குத் திரும்பினாா். அவரும் ஆட்டோவில் செல்லும் வழியில் பொது மக்களிடம் உரையாடினாா்.

கமல்ஹாசன், வானதி சீனிவாசன் ஆகியோா் ஆட்டோக்களில் பயணிக்கும் புகைப்படங்களைப் பகிா்ந்து கமல்ஹாசனின் பாணியை வானதி சீனிவாசன் கடைப்பிடிப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.

இது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, நான் பயன்படுத்தும் காா் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்று பெறுவதற்காக சென்றிருந்தது. கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்திக்க ஒதுக்கிய நேரத்தில் அவா்களைக் காக்க வைக்கக் கூடாது என்பதற்காக ஆட்டோவில் ஏறிச் சென்றேன். கமல்ஹாசனுக்கு இது புதிதாக இருக்கலாம். ஆனால், என்னுடைய தினசரி வாழ்க்கையில் இது வழக்கமாக நடக்கிற ஒன்றுதான். இதை கமல்ஹாசன் செய்த பிரசாரத்துடன் ஒப்பிட வேண்டியத் தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com