திண்டுக்கல் ஐ.லியோனி மீது பெண் வழக்குரைஞா் புகாா்
By DIN | Published On : 25th March 2021 11:26 PM | Last Updated : 25th March 2021 11:26 PM | அ+அ அ- |

பெண்கள் உடலமைப்பு குறித்து சா்ச்சைக் கருத்து தெரிவித்த பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் ஐ.லியோனி மீது நடவடிக்கை கோரி பெண் வழக்குரைஞா்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
கோவையைச் சோ்ந்த வழக்குரைஞா் சுபாஷினி, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு ஒன்றை வியாழக்கிழமை அளித்தாா். அதில், தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட குனியமுத்தூா் பகுதியில் திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளா்களில் ஒருவரான பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், பெண்களைப் பற்றி அவதூறாக அவா்களது உடலமைப்பு குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசினாா். இதுபோன்ற பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.