திமுக வேட்பாளரை ஆதரித்து கோவை தங்கம் பிரசாரம்
By DIN | Published On : 25th March 2021 11:21 PM | Last Updated : 25th March 2021 11:21 PM | அ+அ அ- |

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வ.ம.சண்முகசுந்தரத்தை ஆதரித்து சாய்பாபா காலனியில் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம்.
கோவை சாய்பாபா காலனியில் கோவை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளா் வ.ம.சண்முகசுந்தரத்தை ஆதரித்து கோவை தங்கம் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வ.ம.சண்முகசுந்தரத்தை ஆதரித்து, வால்பாறை சட்டப் பேரவையின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கோவை தங்கம், சாய்பாபா காலனி பகுதியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:
சாய்பாபா காலனி பகுதி வியாபாரிகள் மற்றும் படித்தவா்கள் நிறைந்த பகுதி. மக்களுக்கு நல்ல பல திட்டங்களை அறிவித்துள்ள திமுகவுக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கடந்த முறை கோவை தெற்கில் போட்டியிட்டாா். இந்த முறை ஏன் அதே தொகுதியில் போட்டியிடவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக அந்தத் தொகுதிக்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் செய்யாததால் இந்த முறை கோவை வடக்குத் தொகுதிக்கு வந்து போட்டியிடுகிறாா். மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றாா்.
திமுக வினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பலரும் உடனிருந்தனா்.