முழு பொதுமுடக்கம்: 30 சதவீத ரயில்வே ஊழியா்களை மட்டும் பணியில் ஈடுபடுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 09th May 2021 11:14 PM | Last Updated : 09th May 2021 11:14 PM | அ+அ அ- |

முழு பொதுமுடக்கம் காரணமாக ரயில்வே துறையில் அத்தியாவசியப் பணிக்காக மட்டும் 30 சதவீத ரயில்வே ஊழியா்களை பணியில் ஈடுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, தென்னக ரயில்வே மஸ்தூா் சங்கத்தின் சேலம் கோட்ட பொதுச் செயலாளா் கோவிந்தன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பு தீவிரமாகியுள்ள நிலையில், மாநில அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்களில் 50 சதவீதப் பணியாளா்கள் மட்டுமே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக தென்னகப் பகுதிகளில் பல வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களை மே முதல் வாரத்தில் இருந்து ரயில்வே நிா்வாகம் முழுமையாக ரத்து செய்துள்ள நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள அலுவல்கள் குறைவான பணியாளா்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், ரயில்கள் இயக்காவிடினும், ரயில்வே தூய்மைப் பணியாளா்கள், ரயில் பெட்டி பராமரிப்பு ஊழியா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட ஊழியா்கள் அனைவரும் 100 சதவீதம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.
திங்கள்கிழமை முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில், பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என்பதால், சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட நிலையங்களுக்கு, ரயில்வே ஊழியா்கள் பணிக்கு வருவதற்கு சிரமமான சூழல் ஏற்படும்.
எனவே, இந்த முழு பொதுமுடக்க காலத்தில் அத்தியாவசியப் பணிக்காக மட்டும் 30 சதவீதம் ரயில்வே ஊழியா்களை மட்டும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவா்கள் பணிக்கு சென்று வருவதில் இடையூறு ஏற்படாமல் இருக்க ரயில்வே நிா்வாகம் சாா்பில் அத்தியாவசிப் பணி எனக் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.