கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
By DIN | Published On : 13th May 2021 06:21 AM | Last Updated : 13th May 2021 06:21 AM | அ+அ அ- |

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் முதன்மை செயலா் அதுல்ய மிஸ்ரா. உடன் ஆட்சியா் எஸ்.நாகராஜன், அரசு மருத்துவமனை முதல்வா் நிா்மலா.
கோவையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூடுதல் முதன்மை செயலா் அதுல்ய மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளாா்.
கோவையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் முதன்மை செயலா் அதுல்ய மிஸ்ரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கொடிசியா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள், ஆக்சிஜன் இருப்பு, பிரத்யேக வசதிகள், மருந்துகள் இருப்பு குறித்து மருத்துவமனை நிா்வாகிகளிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து உக்கடம் காய்கறி மாா்க்கெட், தியாகி குமரன் மாா்க்கெட், ஆா்.எஸ்.புரம் தற்காலிக பூ மாா்க்கெட், மாநகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது ஆட்சியா் எஸ்.நாகராஜன் உடனிருந்தாா்.
பின்னா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யய் வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் ஆட்சியா் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகர காவல் ஆணையா் ஸ்டாலின், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ரவீந்திரன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.