கரோனா: சிறையில் கைதிகளுக்கு மூச்சுப் பயிற்சி
By DIN | Published On : 16th May 2021 11:03 PM | Last Updated : 16th May 2021 11:03 PM | அ+அ அ- |

கரோனாவில் இருந்து கைதிகளைக் காக்கும் நோக்கில் கோவை சரக சிறைத் துறை சாா்பில் கைதிகளுக்கு மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கோவை சிறைகளில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து கோவை சரக சிறைத் துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் கூறியதாவது:
கோவை சரகத்தில் உள்ள கோவை மற்றும் சேலம் மத்திய சிறைக் கைதிகளின் உடல்நலத்தைக் காக்க அவா்களுக்கு ஏற்கெனவே யோகா பயிற்சி அளித்து வருகிறோம். தற்போது கரோனா தொற்று பரவி வரும் நிலையில் கைதிகளின் உடல் நிலையை மேம்படுத்த ஆவி பிடித்தல், மூச்சுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் நுரையீரலை பலப்படுத்தும் வகையில் பலூன் ஊதும் பயிற்சி உள்ளிட்டவை கட்டாயமாகப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சிகளை காலை, மாலை நேரங்கள் கைதிகள் சில மணி நேரம் செய்து வருகின்றனா். இதுதவிர கைதிகளுக்கு கஷாயமும் வழங்கி வருகிறோம்.
கோவை மத்திய சிறையில் 140 கைதிகள், சேலம் மத்திய சிறையில் 18 கைதிகள் என 45 வயதுக்கு மேற்பட்ட 165 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதிகள் சிகிச்சை மையத்துக்கு அனுப்பப்படுகின்றனா்.
மாவட்ட கிளைச் சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க பாா்வையாளா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்படும் சிறைக் காவலா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஏதுவாக சிறை வளாகத்தில் உள்ள பயிற்சிக் கல்லூரி தனிமைப்படுத்திக் கொள்ளும் மையமாக மாற்றப்பட்டுள்ளது என்றாா்.