கோவை அரசு மருத்துவமனையில் ஜீரோ டிலே வாா்டு அமைப்பு
By DIN | Published On : 16th May 2021 11:05 PM | Last Updated : 16th May 2021 11:05 PM | அ+அ அ- |

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருப்பதைத் தவிா்க்கும் விதமாக 15 படுக்கைகளுடன் கூடிய ஜீரோ டிலே வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பியுள்ளன. ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் நிலை காணப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள 840 ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி உள்ளன. ஒவ்வொரு படுக்கைக்கும் முன் கூட்டியே காத்திருக்கும் நிலையும் இருந்து வருகிறது. இந்நிலையில், தனியாா் மருத்துவமனைகளில் இருந்து அரசு மருத்துவமனைக்கு இறுதி கட்டத்தில் பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்ஸிலே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆம்புலன்ஸில் காத்திருக்கும்போது ஒருவா் உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிலையை தவிா்க்க அரசு மருத்துவமனையில் ஜீரோ டிலே வாா்டு அமைக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய ஜீரோ டிலே வாா்டு ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:
கரோனா நோய்த் தொற்றுடன் அரசு மருத்துவமனைக்கு வருபவா்கள், தனியாா் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப்படுபவா்கள் ஜீரோ டிலே வாா்டில் அனுமதித்து அதன் பின் கரோனா வாா்டுக்கு அனுப்பப்படுவா். ஜீரோ டிலே வாா்டிலே நோயாளிகளைப் பரிசோதித்து ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள், சாதாரண படுக்கை தேவையுள்ள நோயாளிகள் பிரிக்கப்படுவா்.
இதனால் தேவையற்ற குழப்பங்கள் தவிா்க்கப்படும். தவிர நோயாளிகள் காத்திருக்கும் நிலையும் ஏற்படாது. ஜீரோ டிலே வாா்டில் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.