கரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை தத்தெடுத்தது ஈஷா
By DIN | Published On : 19th May 2021 06:26 AM | Last Updated : 19th May 2021 06:26 AM | அ+அ அ- |

கரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை ஈஷா அறக்கட்டளை தத்தெடுத்துள்ளது. இதன்மூலம் 2 லட்சம் கிராம மக்கள் பயனடைவா்.
கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து இருக்கும் சூழலில் ஈஷா அவுட்ரீச் அமைப்பு கோவையில் 43 கிராமங்களில் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதன் மூலம், 17 ஊராட்சிகளில் உள்ள சுமாா் 2 லட்சம் கிராம மக்கள் பயன்பெறுவா்.
பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவா்கள், செவிலியா், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் காவல் துறையினா் என பல தரப்பினருக்கும் உதவும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இப்பணியில் ஈஷா பிரம்மாச்சாரிகள், தன்னாா்வலா்கள் மற்றும் இளைஞா்கள் உள்பட ஏராளமானோா் அா்ப்பணிப்புடன் ஈடுப்பட்டு வருகின்றனா். அதன்படி, கீழ்க்கண்ட நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினமும் சுமாா் 1.2 லட்சம் பேருக்கு நிலவேம்பு அல்லது கபசுர குடிநீா், உடலில் நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வகையில் ‘சிம்ம க்ரியா’ மற்றும் ‘சாஷ்டாங்கா’ என்ற 2 எளிய யோக பயிற்சிகள் 1.5 லட்சம் பேருக்கு கற்றுக்கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒலிபெருக்கிகளுடன் கூடிய ஆட்டோக்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் கரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
2,500 முன்களப் பணியாளா்களுக்கு முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கப்படுகிறது.
7 அரசு மருத்துவமனைகளிலும் தினமும் கிருமி நாசினிகள் தெளிப்பதற்கு உதவிகள் செய்து தரப்படும்.
கரோனா பாதித்த நோயாளிகளை கரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று உதவிகள் செய்யப்படும். தேவை ஏற்பட்டால், கட்டுப்பாடு பகுதிகளில் இருக்கும் கரோனா நோயாளிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் தேவையான உதவிகள் செய்து தரப்படும்.
ஈஷாவின் கரோனா நிவாரணப் பணிகள் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு மேலாக தொடா்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.