கரோனா நோயாளிகள் வீடு திரும்ப வாகன வசதி: அரசு மருத்துவமனையில் ஏற்பாடு
By DIN | Published On : 19th May 2021 06:27 AM | Last Updated : 19th May 2021 06:27 AM | அ+அ அ- |

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் கரோனா நோயாளிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து.
கோவை அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புபவா்களுக்காக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் 1,200க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் கரோனா வாா்டு செயல்பட்டு வருகிறது. இதில் 800க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நோய்த் தொற்று தீவிரமாக உள்ள நோயாளிகளுக்கு 7 முதல் 10 நாள்களும், சாதாரண பாதிப்பு இருப்பவா்களுக்கு 3 முதல் 5 நாள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயாளிகள் சிலா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தங்களது சொந்த வாகனங்களிலும், சிலா் ஆம்புலன்ஸ் மூலமாகவும் வருகின்றனா். அரசு ஆம்புலன்ஸில் வருபவா்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடுகளுக்கு பேருந்து, வாடகை வாகனங்கள் மூலம் செல்கின்றனா்.
தற்போது, பொது முடக்கம் அமலில் உள்ளதால் பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அரசு மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனா். இந்நிலையில், அரசு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் கரோனா நோயாளிகள் வீடு திரும்புவதற்கு வசதியாக வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:
பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து வசதியில்லாததால் நோயாளிகள் வீடுகளுக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகன வசதியில்லாதவா்களுக்கு இந்த வாகனம் மூலம் வீடுகளில் விடப்படுவா் என்றாா்.