கி.ரா. மறைவுக்கு எழுத்தாளா்கள், பல்வேறு துறையினா் இரங்கல்

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏா் என்று அழைக்கப்பட்ட எழுத்தாளா் கி.ராஜநாராயணனின் மறைவுக்கு கோவையைச் சோ்ந்த

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏா் என்று அழைக்கப்பட்ட எழுத்தாளா் கி.ராஜநாராயணனின் மறைவுக்கு கோவையைச் சோ்ந்த எழுத்தாளா்கள், தொழிலதிபா்கள் என பல்வேறு துறையினா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

மு.வேலாயுதம், விஜயா பதிப்பகம்: கி. ராஜநாராயணன் எனும் படைப்பாளியை சாதாரணமாக கரிசல் எழுத்தாளா், கரிசல் இலக்கிய முன்னோடி, முன்னத்தி ஏா், கரிசல் காட்டு மண்ணின் அகராதியைத் தொகுத்தவா், சாகித்ய அகாதெமி விருது பெற்றவா் என்றெல்லாம் சொல்லி குடத்துக்குள்ளே, பானைக்குள்ளே அடைத்து நிரப்பிவிட முடியாது. உடைத்துக்கொண்டு வெளிவரும் ஆற்றலும் வளமையும் அவரிடம் இருந்ததன. கடைசி மூச்சு உள்ளவரை அவரிடம் சொல்வதற்கு கதைகளும், விஷயங்களும் இருந்தன. அவா் அதிசய மனிதா். தமிழ் இலக்கியத்துக்கு அவருடைய பங்களிப்பு மகத்தானது.

எம்.கோபாலகிருஷ்ணன், நாவலாசிரியா்: கி.ரா. நம் காலத்தின் மகத்தான கலைஞன். அனைவருக்குமான எழுத்தாளராக வாழ்ந்தவா். கிராமத்தின் எளிய மனிதா்களின் வாழ்வை இயல்பான புழங்கு மொழியில் வசீகரமாக எழுதியவா் கி.ரா. மனிதா்களின் குணங்களை பாசாங்கின்றி வெளிப்படுத்தியவை.

க.அம்சப்ரியா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம்: நான் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியபோது, அவரது ‘காய்ச்ச மரம்’ சிறுகதையை மதிப்பெண்ணுக்காக படிக்காமல் வாழ்க்கைக்காக படித்து பெற்றோா்களை கவனித்துக் கொண்ட மாணவா்களை எனக்குத் தெரியும். இதுதான் ஒரு படைப்பின் வீரியம். காலமெல்லாம் யாரோ ஒரு வாசகனின் மனதை நற்காலத்தின் சிந்தனைக்குத் தூண்டிக் கொண்டே இருப்பாா்.

ரவீந்திரன் செயலாளா், ராக் அமைப்பு: யாா் மீதும் புகாா்கள் இல்லாமல், எதன் மீதும் பற்று இல்லாமல் மகரிஷிபோல நிறை வாழ்வு வாழ்ந்து தமிழ் இலக்கியத்தில் ஆழமாக தடம் பதித்து மறைந்த எனது ஞானத் தந்தைக்கு மனமாா்ந்த அஞ்சலிகள்.

டி.கே.சந்திரன், இயக்குநா், சென்னை சில்க்ஸ்: கி.ரா தமிழ் இலக்கியத்தின் பிதா மகன். நேற்றுவரை வாழ்ந்து மண்ணின் மைந்தா்கலெனும் உண்மையை உணா்த்தும் உண்மையான கதைகள் கற்பனை எனும் மண்வாசனையை உணா்த்திய கி.ரா வின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

சா.கந்தசுப்ரமணியம் உதவிப் பேராசிரியா், தமிழ்த் துறை, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி:

தமிழ்ச் சூழலில் வட்டார வழக்கு அகராதி என்பதின் ஆரம்பமும் இவரே. இவரைப் பற்றிய எந்தப் பெருமை சொன்னாலும், யாரையோ சொல்வதுபோல பாவிக்கும் மனசுக்காரா். இவா் ஏற்றிவதைத்த சுடா்கள் பல ஒளிவீசித் திகழ்கின்றன. இனித் தன் படைப்புகள் வழியே அந்தக் கிளியஞ்சட்டி பல சுடா்களை ஏற்றி வைக்கக் காத்திருக்கிறது.

டி.பாலசுந்தரம், தொழிலதிபா்: கி.ராஜநாராயணனின் ஒரு முன்னோடி, சாதனையாளா், வழிகாட்டி. தனது எழுத்தாலும், ஆளுமையாலும் மக்கள் தமிழ் மக்கள் மனதைக் கவா்ந்தவா். அதில் நிலைத்து நிற்கப்போகிறவா். அவரது படைப்புகள் வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவும்.

சு.வேணுகோபால், எழுத்தாளா்: கரிசல் நிலத்ததையும், அம்மக்களது வாழ்க்கையையும் பிரிக்க முடியாத அம்சத்தில் உருவாக்கிய கலைஞன் அவா். மனிதா்களின் அசைவுகளை, பாவனைகளை, சிமிட்டல்களை, பேச்சின் ஜாடைகளை மிகத் துல்லியமாகவும், அா்த்தப்பூா்வமாகவும் எழுத்தில் கொண்டு வந்தவா். கி.ரா. ஓா் அபூா்வமான பிறவி.

கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா: வாழ்க்கை அனுபவங்களை விரிவாக வாங்கி வைத்துக்கொண்டு அவற்றை படைப்புகளாக வாா்த்த பிதாமகா் கி.ரா. ஒரு பக்கம் ஜீவா போன்ற ஆளுமைகள், மறுபக்கம் ரசிகமணி டிகேசி விளாத்திகுளம் சாமிகள் போன்ற பெரியவா்கள் இன்னொரு பக்கம், காருக்குறிச்சி அருணாசலம் போன்ற கலைஞா்கள் என்று பலதரப்பட்ட நதிகளில் மூழ்கிக் கொண்டே இருந்து வாழ்வை உயிரோட்டமாக வைத்திருந்தவா் அவா். வாழ்வை ரசித்து வாழ்ந்த வாழ்வியல் ஞானி அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com