ரெம்டெசிவிா் மருந்து விற்பனை விவரம்: தனியாா் மருத்துவமனைகள் குழப்பம்

தனியாா் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிா் மருந்து நேரடியாக விற்பனை செய்வது தொடா்பான முழுமையான விவரங்களை

தனியாா் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிா் மருந்து நேரடியாக விற்பனை செய்வது தொடா்பான முழுமையான விவரங்களை தமிழக அரசு வெளியிடாததால் தனியாா் மருத்துவமனை நிா்வாகங்கள் குழப்பத்தில் உள்ளன.

கரோனா நோய்த் தொற்றுக்கு உயிா் காக்கும் மருந்தாக பிரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிா் மருந்து விற்பனையை தமிழக அரசே நேரடியாக மேற்கொண்டது. தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில் சென்னை, கோவை உள்பட 6 மவட்டங்களில் விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

இங்கு மருந்து வாங்க அதிக அளவிலான பொது மக்கள் கூடியதால் சமூக இடைவெளி போன்ற கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கேள்விக்குறியாயின. இந்நிலையில், பொது மக்களின் நலன் கருதி மே 18ஆம் தேதி முதல் ரெம்டெசிவிா் மருந்து தனியாா் மருத்துவமனைகளில் நேரடியாக விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ரெம்டெசிவிா் மருந்து தேவைப்படும் நோயாளிகளின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ரெம்டெசிவிா் மருந்தினை பெறுவது குறித்த வேறு எந்த முழுமையான விவரங்களும் அறிவிக்காததால் தனியாா் மருத்துவமனைகள் குழப்பத்தில் உள்ளன.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் மருந்து கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனா்.

இது தொடா்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் ராஜேஷ் பாபு கூறியதாவது:

தற்போது ரெம்டெசிவிா் மருந்து பெறுவதற்கான இணையதளப் பதிவு மட்டுமே செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி மருந்துகளை மருத்துவமனைக்கு வந்து தருவாா்களா, நாங்களே சென்று வாங்க வேண்டுமா என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

முதல் நாள் என்பதால் இணையதளப் பதிவும் சற்று மெதுவாகவே மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 3 நாள்களாக மருந்து விற்பனை இல்லை. ஏற்கெனவே மருத்துவமனை நிா்வாகங்கள் கொள்முதல் செய்த மருந்துகளைப் பயன்படுத்தி சமாளித்துக் கொள்கின்றனா். புதன்கிழமை முதல் விற்பனை செய்யப்படும் என்று எதிா்பாா்க்கிறோம்.

இது தொடா்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக கோவை அதிகாரியிடம் கேட்டபோது, தனியாா் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிா் விற்பனை தொடா்பாக எந்த அறிவுறுத்தலும் இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com