பழங்குடியின மக்களுக்காக சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்த வேண்டும்
By DIN | Published On : 01st September 2021 07:26 AM | Last Updated : 01st September 2021 07:26 AM | அ+அ அ- |

கோவையில் பழங்குடியின மக்களிடம் கரோனா தடுப்பூசி தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தி சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதன்படி கோவை மாவட்டத்தில் பொது மக்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்துத் தரப்பினருக்கும் தடுப்பூசி எளிதில் கிடைக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பழங்குடியினா்கள், தொலைதூர கிராமங்களில் வசிப்பவா்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அதனுடன் பழங்குடியின மக்களுக்காக சிறப்பு முகாம்கள் அமைத்து அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர மாற்றுத் திறனாளிகள், அவா்களின் பாதுகாவலா்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் விடுபட்டவா்களின் விவரங்களை சேகரித்து அவா்களின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும்.
ஏற்கெனவே, மூன்றாம் பாலினத்தவா்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
கா்ப்பிணிகள் பரிசோதனைகள் செய்யும் மருத்துவமனைகளிலேயே கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள், கல்லூரி வகுப்புகளும் சுழற்சி முறையில் கரோனா வழிகாட்டு
நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 வயது நிறைவடைந்த கல்லூரி மாணவா்கள், பள்ளிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், விடுதிகளில் பணிபுரிபவா்கள் உள்பட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை பள்ளிக் கல்வித் துறையினா் உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.கவிதா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம் (மகளிா் திட்டம்) திட்ட இயக்குநா் கு.ரமேஷ்குமாா், இணை இயக்குநா் (சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப்பணிகள்) சந்திரா, உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.