போக்குவரத்து விதிமீறல்: நடப்பாண்டில் இதுவரை 9 லட்சம் வழக்குகள் பதிவு
By DIN | Published On : 01st September 2021 07:20 AM | Last Updated : 01st September 2021 07:20 AM | அ+அ அ- |

கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக நடப்பாண்டில் இதுவரையில் 9 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையா் செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கியது தொடா்பாக 5 லட்சத்து 43 ஆயிரத்து 599 வழக்குகள், காா் சீட் பெல்ட் அணியாமல் இலகு ரக வாகனங்கள் இயக்கியதாக 14 ஆயிரத்து 339 வழக்குகள், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 394 வழக்குகள், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 8 ஆயிரத்து 809 வழக்குகள், அபாயகரமாக வாகனங்கள் ஓட்டியதாக 4 ஆயிரத்து 173 வழக்குகள், செல்லிடப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டியதாக 1,617 வழக்குகள், சிக்னல் விதிமுறை மீறல் தொடா்பாக 48 ஆயிரத்து 347 வழக்குகள், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 367 வழக்குகள், நோ பாா்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தியதாக 1 லட்சத்து 02 ஆயிரத்து 647 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாத இறுதி வரை 9 லட்சத்து 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக ரூ.1.81 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.