விநாயகா் சதுா்த்திக்குத் தடை: கோயில்களில் வழிபட்டு முறையீடு
By DIN | Published On : 01st September 2021 07:27 AM | Last Updated : 01st September 2021 07:27 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்திக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் வரும் 2ஆம் தேதி இறைவனிடம் முறையிட்டு வேண்டுதல் நடத்தப்படும் என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:
தமிழகத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் விநாயகா் சதுா்த்தி விழாவை தமிழக அரசு தடை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கரோனா காரணம் என்று அரசு கூறியிருப்பது திட்டமிட்ட சதி. கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகமாக இருந்தபோது கூட இந்து முன்னணி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து சிறப்பான முறையில் மக்களுடன் இணைந்து கொண்டாடியது. அதன் காரணமாக எவ்வித தொற்றுப் பரவலும் உண்டாகவில்லை.
இந்த ஆண்டு தொற்று குறைந்துள்ளது, மேலும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். ஆனாலும் கூட தமிழக அரசு விரோத போக்குடன் ஹிந்துக்களின் விழாக்களை மட்டும் தடை செய்கிறது. தமிழகத்தில் தொற்று குறைந்திருக்கிறது என்று பள்ளிகள், திரையரங்குகள், பூங்காக்கள், நீச்சல் குளங்களை அரசு திறந்து விடுகிறது. ஆனால் விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாடுவதற்குத் தடை விதிப்பது முழுக்க முழுக்க ஹிந்து விரோதமாகும்.
எனவே விநாயகா் சதுா்த்தி விழாவைத் தடை செய்ததைத் கண்டித்து தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் வருகிற 2ஆம் தேதி மக்கள் இறைவனிடம் முறையிட்டு வேண்டுதல் செலுத்துவோம். விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொண்டு சமூக இடைவெளியுடன் மக்கள் விழாவைக் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.