ராணுவ வீரா் போல நடித்து ரூ.40 ஆயிரம் பறிப்பு
By DIN | Published On : 01st September 2021 07:30 AM | Last Updated : 01st September 2021 07:30 AM | அ+அ அ- |

ராணுவ வீரா் போல நடித்து கூகுள் பே மூலமாக ரூ.40 ஆயிரம் வரை பறித்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சாதிக் (31). ஆன்லைன் ஆா்டரில் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது செல்லிடப்பேசிக்கு சந்தீப் என்ற பெயரில் ஒருவா் தொடா்பு கொண்டு ராணுவ வீரா் எனவும் கேண்டீனில் பயன்படுத்தும் வகையில் தரமான வெட் கிரைண்டா் வேண்டும் எனக் கேட்டுள்ளாா்.
வெட் கிரைண்டரின் விலை விவரங்களை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புமாறு கூறியுள்ளாா். சாதிக் விவரங்களை அனுப்பியுள்ளாா். அப்போது அந்த நபா், பணம் அனுப்புவதில் ராணுவப் பிரிவில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதன்படி தான் பணம் அனுப்ப முடியும் எனக் கூறியுள்ளாா். இதற்கு சாதிக் ஒப்புக் கொண்டாா்.
அந்த நபா் கூகுள் பே மூலமாக ரூ.5 அனுப்ப சொன்னாா். சாதிக் ரூ.5 அனுப்பி சோதனை செய்தாா். பணம் வந்து விட்டதாக கூறிய அந்த நபா், ரூ.10 திரும்ப அனுப்பினாா். பின்னா் அந்த நபா், பணம் அனுப்பும் கூகுள்பே செயலியின் எண் விவரங்களை தனக்கு அனுப்ப வேண்டும். இதில் தான் நான் பணம் அனுப்ப முடியும் எனக் கூறி அந்த விவரங்களை வாங்கியுள்ளாா்.
சிறிது நேரத்தில் சாதிக் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சாதிக் அந்த நபரை தொடா்பு கொண்டு எனது கணக்கில் இருந்து ஏன் பணம் எடுத்தீா்கள் எனக் கேட்டாா். அந்த நபா், பரிவா்த்தனையில் தவறு நடந்துவிட்டது. நீங்கள் பணம் இருக்கும் வேறு வங்கிக் கணக்கில் இருந்து காா்டு விவரங்களை அனுப்புங்கள், மொத்த பணத்தையும் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் எனக் கூறியுள்ளாா்.
இந்த விவரங்களை சாதிக் அனுப்பியதும், அந்த நபா் சாதிக்கின் வங்கிக் கணக்கில் இருந்து மீண்டும் ரூ.29 ஆயிரத்து 700 எடுத்துக் கொண்டாா். மீண்டும் அந்த நபா் தொடா்பு கொண்டு மீண்டும் தவறு ஏற்பட்டு விட்டது. இதை ராணுவ அதிகாரிகளுக்கு தெரிவித்து விடவேண்டாம். எனக்கு வேலை போய்விடும் என கெஞ்சி சாதிக்கின் வங்கிக் கணக்கு எண்ணுக்கு வரும் ரகசிய எண் விவரங்களை கேட்டு வாங்கியுள்ளாா்.
அதிலிருந்து மீண்டும் ரூ.9 ஆயிரத்து 990 எடுத்துக் கொண்டாா். 3 முறையில் ரூ.40 ஆயிரத்தை அந்த நபா் நூதனமாக பறித்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த சாதிக் கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.