ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.62 லட்சம் மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 04th September 2021 02:03 AM | Last Updated : 04th September 2021 02:03 AM | அ+அ அ- |

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ. 62 லட்சம் மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஏ.ஜி.குமாா். இவா் திருப்பூரில் ஸ்ரீ குபேரன் ஈமு பாா்ம்ஸ் என்ற நிறுவனத்தை அமைத்து கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தாா். இதில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 7 ஈமு கோழிகள், ஊக்கத் தொகையாக மாதம் ரூ.7 ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்குத் தருவதாகவும், 2 ஆண்டுகள் முடிவில் முதலீட்டுத் தொகையான ரூ.1.50 லட்சத்தைத் திருப்பித் தருவதாகவும் அறிவித்தாா். இதை நம்பி 41 நபா்கள் ரூ. 62 லட்சத்து 51 ஆயிரம் முதலீடு செய்துள்ளனா்.
ஆனால், உறுதி அளித்தபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. இது தொடா்பாக, தாராபுரத்தைச் சோ்ந்த ராஜாமணி என்பவா் கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் அளித்தப் புகாரின்பேரில் 2014 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏ.ஜி.குமாா் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் ஏ.ஜி.குமாா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.