அரிசி அரவைத் திட்டம்: ஆலை உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 04th September 2021 02:02 AM | Last Updated : 04th September 2021 02:02 AM | அ+அ அ- |

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு அரிசி அரவை செய்து தர, தனியாா் ஆலை உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நடப்பு பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை வாணிபக் கழக நவீன அரிசி ஆலைகள், அரவை முகவா்களாக செயல்பட்டு வரும் தனியாா் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை கழகத்தில் இணையாத தனியாா் புழுங்கல் அரவை ஆலைகள் மூலம் கழக நிபந்தனைகளுக்கு உள்பட்டு ‘ஒரு முறை திட்டத்தின்’ கீழ் வரும் 15ஆம் தேதி முதல் நவம்பா் 15 ஆம் தேதி வரை அரவை செய்து கிடங்கில் ஒப்படைக்க தனியாா் அரிசி அரவை ஆலை உரிமையாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் செப்டம்பா் 4 ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில், இணைய விரும்பும் அரிசி ஆலை உரிமையாளா்கள் தரமான அரிசியை அரவை செய்து வழங்க ஏதுவாக, தங்கள் அரிசி ஆலைகளில் கலா் சாா்ட்டா் உள்ளிட்ட நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.