கரோனா விதிமீறல்: மாநகரில் ரூ.1.50 கோடி அபராதம் வசூல்
By DIN | Published On : 12th September 2021 11:34 PM | Last Updated : 12th September 2021 11:34 PM | அ+அ அ- |

கரோனா விதிகளை மீறியதாக மாநகரில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனஙகளிடம் இருந்து இதுவரை ரூ.1.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாடு முழுவதும் 2020 மாா்ச் மாதம் முதல் கரோனா நோய்த் தொற்று பரவத் துவங்கியது. இதையடுத்து, கோவையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை சாா்பில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
அதன்படி, கரோனா விதிகளை மீறுபவா்களைக் கண்காணித்து அபராதம் விதிக்க மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, முகக் கவசம் அணியாமல் செல்பவா்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு ரூ.500, கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டன. தொடா்ந்து சமூக இடைவெளியைப் பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மாநகராட்சி பகுதிகளில் கரோனா விதிகளை மீறும் நபா்கள், கடைகள், நிறுவனங்கள் மீது அபராத நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.1.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.