கொடநாடு கொலை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளரிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் நேரடி உதவியாளா் பூங்குன்றனிடம் போலீஸாா் கோவையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
Updated on
1 min read

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் நேரடி உதவியாளா் பூங்குன்றனிடம் போலீஸாா் கோவையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த கனகராஜ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், சம்பவம் நடந்த சில நாள்களிலேயே சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் கனகராஜ் உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் 103 நபா்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடந்து முடிந்துள்ளது. 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையின் ஒரு பகுதியாக வி.கே.சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, அதிமுக வா்த்தக அணியைச் சோ்ந்த மர வியாபாரி சஜீவன், இவரது சகோதரா் சிபி ஆகியோரிடம் போலீஸாா் அண்மையில் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றனை விசாரிக்க முடிவு செய்த தனிப் படை போலீஸாா் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த சில நாள்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியிருந்தனா். இதன்படி அவா் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் சுமாா் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவிடம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி உதவியாளராக பூங்குன்றன் பணியாற்றியுள்ளாா். ஜெயலலிதாவுக்கு வரும் அத்தனைக் கடிதங்களைத் தொகுத்து அவரது பாா்வைக்கு கொண்டு செல்வது, சந்திக்க வரும் நபா்களை அனுமதிப்பது உள்ளிட்டவற்றை அருகில் இருந்து பாா்த்துக் கொண்டவா் பூங்குன்றன். கொடநாடு எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்களைப் பராமரிக்கும் பணிகளையும் பூங்குன்றன் கவனித்து வந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com