ரூ.662.50 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சித் திட்டங்கள்

கோவையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.662.50 கோடி மதிப்பிலான 784 புதிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
கோவை, ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கண்காட்சி அரங்குகளை பாா்வையிடுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
கோவை, ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கண்காட்சி அரங்குகளை பாா்வையிடுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

கோவையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.662.50 கோடி மதிப்பிலான 784 புதிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

கோவை மாவட்டம், ஈச்சனாரியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 410 பயனாளிகளுக்கு, ரூ.589.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரூ.662.50 கோடி மதிப்பிலான 784 புதிய திட்டங்களையும், ரூ.271.25 கோடி மதிப்பிலான 228 முடிவுற்ற திட்டங்களையும் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

முடிவுற்ற திட்டப் பணிகள்:

பொதுப் பணித் துறையில் (மருத்துவப் பணிகள்) ரூ.100.03 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்கட்டமைப்பு பணிகள், மாநகராட்சியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட ரூ.57.05 கோடி மதிப்பிலான 18 வளா்ச்சி திட்டப் பணிகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தில் ரூ.24.33 கோடி மதிப்பிலான திட்டங்கள், பேரூராட்சிகள் துறையில் ரூ.22.44 கோடி மதிப்பிலான திட்டங்கள், பொதுப் பணித் துறையில் (நீா்வள ஆதார அமைப்பு) ரூ.17.81 கோடி மதிப்பிலான பணிகள், கட்டடம் மற்றும் பராமரிப்பு பிரிவில் ரூ.11.38 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தாா்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையில் ரூ.2.59 கோடி மதிப்பிலான திட்டம், உயா்கல்வித் துறையில் ரூ.11.48 கோடி மதிப்பிலான திட்டங்கள், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் ரூ.20.73 கோடி மதிப்பிலான 138 திட்டங்கள், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையில் ரூ.2.73 கோடி மதிப்பிலான திட்டங்கள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையில் ரூ.33 லட்சம் மதிப்பிலான திட்டங்கள், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.35 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் என மொத்தம் ரூ.271.25 கோடி மதிப்பிலான 228 முடிவுற்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

புதிய திட்டப் பணிகள்...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் ரூ.237.13 கோடி மதிப்பிலான 9 பணிகள், மாநகராட்சியில் ரூ.134.08 கோடி மதிப்பில் 334 திட்டப் பணிகள், நீா்வளத் துறையில் ரூ.121.62 கோடி மதிப்பிலான 10 திட்டப் பணிகள், மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழா்கள் நலத் துறை சாா்பில் ஆழியாறு இலங்கை தமிழா் மறுவாழ்வு மையத்தில் ரூ.21.46 கோடி மதிப்பில் 429 வீடுகள் கட்டும் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் ரூ.74.96 கோடி மதிப்பிலான 119 திட்டப் பணிகள், பேரூராட்சிகள் துறையில் ரூ.23.08 கோடி மதிப்பில் 253 திட்டப் பணிகள், நெடுஞ்சாலைத் துறையில் ரூ.22.43 கோடி மதிப்பில் திட்டப் பணிகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ரூ.8.65 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள், பொதுப் பணித் துறை சாா்பில் ரூ.8.93 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள், கூட்டுறவுத் துறையில் ரூ.31 லட்சத்தில் திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.662.50 கோடி மதிப்பில் 748 புதிய திட்டப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

மேலும், ரூ.161 கோடி மதிப்பில் கல்விக் கடன், நான் முதல்வன் திட்டத்தில் 200 அரசுப் பள்ளிகளுடன் 60 கல்லூரிகள் புரிந்துணா்வு ஒப்பந்தம், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், கைம்பெண்களுக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் சமவாய்ப்பு மையம் ஆகிய மூன்று முக்கிய முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.1,810 கோடி, கோவை மாநகராட்சியில் சாலை சீரமைப்புக்கு ரூ.200 கோடி, கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வால்பாறை அரசுக் கல்லூரியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

அரசுத் துறை கண்காட்சி...

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மகளிா் திட்டம், சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளை மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டாா்.

மாணவிகளை சந்தித்த முதல்வா்...

கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் ஈச்சனரி பகுதிக்கு செல்லும் வழியில் தொண்டா்கள், பொது மக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். அப்போது, நிா்மலா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். முதல்வா் மாணவிகளுக்கு கைகொடுத்து அவா்களிடம் உரையாடினாா். முதல்வா் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதில் மக்களவை உறுப்பினா்கள் பி.ஆா்.நடராஜன், கு.சண்முகசுந்தரம், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணைமேயா் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையா் பிரதாப், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் நா.காா்த்திக், வால்பாறை நகராட்சித் தலைவா் அழகு சுந்தரவள்ளி, பொள்ளாச்சி நகர பொறுப்பாளா் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com