

கோவை: கோவையை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான, பிரகலட்சுமி, பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி, பறை இசைத்தபடி 30 டியூப் லைட்டுகளின் மீது நடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். கிராமிய புதல்வன் எனும் அகாடமியின் நிறுவனரான இவர், கரகாட்டம், ஒயிலாட்டம், பறை இசை, உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார். இவரது மனைவியான பிரகலட்சுமி கிராமிய கலைகளில் மிகவும் ஆர்வமுடையவர். ஏற்கனவே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது சாதனை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், இரண்டாவது முறையாக நிறைமாத கர்ப்பிணியாக உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நாடு முழுவதும் ,அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், இந்த குற்றங்களுக்கான தண்டனை பிரிவு சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தியும் கைகளில் பறை இசைத்தபடி, 30 டியூப் லைட்டுகளின் மீது, உச்சி வெயிலில் நடந்த படி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
ஒவ்வொரு லைட்டையும் கால்களால் உடைத்தபடி 3.55 விநாடிகளில் இவர் செய்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. நிறைமாத கர்ப்பிணிகளுக்கு தைரியம் மற்றும் ஊக்கம் அளிக்கும் விதமாக இவர் செய்த சாதனையை பாராட்டி, கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனரும், ஐ.நா.சபை இளைஞர் அமைப்பின் தூதுவருமான டாக்டர் கலையரசன் பிரகலட்சுமிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
சாதனை குறித்து நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி கூறுகையில், தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான தண்டனைகளை அதிகபடுத்தும் விதமாக சட்ட பிரிவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும், என்னைப்போன்ற தந்தை இல்லாத பெண்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையை போல பாதுகாப்பு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
நிறைமாத கர்ப்பிணியின் இந்த சாதனை சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.