

‘பாரத் கௌரவ்’ என்ற திட்டத்தின் கீழ் கோவையில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், ஷீரடிக்கு தனியாா் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்தியாவில் உள்ள 5 நகரங்களில் இருந்து ‘பாரத் கெளரவ்’ என்ற திட்டத்தின் கீழ் தனியாா் ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது. அதில், கோவையும் ஒன்றாகும். இதன்படி, வடகோவை ரயில்நிலையத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு தனியாா் சுற்றுலா ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டது. திரைப்பட இயக்குநா் சேரன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் கௌதம் சீனிவாஸ், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஹரிகிருஷ்ணன், தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி குகநேசன், தொழிலதிபா் மாா்ட்டின் உள்ளிட்டோா் ரயில் சேவையை மலா் தூவி தொடக்கிவைத்தனா்.
வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் புறப்பட்ட இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, பெங்களூரு, தா்மாவரம், மந்த்ராலயம் வழியாக 16ஆம் தேதி காலை 7.25 மணிக்கு ஷீரடி சென்றடையும் . 17ஆம் தேதி காலை 7.25 மணிக்கு ஷீரடியில் இருந்து புறப்பட்டு 18ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு கோவை வந்தடையும்.
இதுகுறித்து, ரயில்வே நிா்வாகம் தரப்பில் கூறியதாவது: கோவை - ஷீரடி ரயிலில் சாதாரண படுக்கை வசதிக்கு ரூ.2,500, குளிா்சாதன வசதி மூன்றடுக்கு படுக்கை வசதிக்கு ரூ.5,000, குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிக்கு ரூ.7,000, குளிா்சாதன முதல் வகுப்பு படுக்கை வசதிக்கு ரூ.10,000 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் சிறப்பு தரிசனம், 3 போ் தங்கும் குளிா்சாதன வசதி கொண்ட அறை, ஷீரடி ரயில் நிலையத்தில் இருந்து சாலைப் போக்குவரத்து கட்டணம் உள்ளிட்டவை அடங்கும்.
மேலும், ஷீரடி செல்லும் வழியில் மந்த்ராலயம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷீரடி சாய்பாபா கோயிலில் பயணிகளுக்கு சிறப்பு வி.ஐ.பி.”தரிசனம் வழங்கப்படும். பயணிகளுக்கு விபத்து காப்பீட்டு பிரீமியம் தனியாா் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. குளிா்சாதனப் பெட்டிகளில் பயணிப்போருக்கு போா்வை, தலையணை, விரிப்புகள் வழங்கப்படும். சப்பாத்தி, இட்லி, சாம்பாா் சாதம், தயிா்சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. பயணத்தின்போது, கோயில்களின் சிறப்புகள் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படும். ரயில் பயணிகளின் சுகாதாரத்தை பேணிக் காக்க மருத்துவா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் ரயில் சேவையை கண்டித்து ஆா்ப்பாட்டம்:”
கோவை முதல் ஷீரடி வரை தொடங்கப்பட்டுள்ள தனியாா் ரயில் சேவையை திரும்பப் பெற வேண்டும். தில்லி - நேபாளம் ரயிலை ஐ.ஆா்.சி.டி.சி.க்கு வழங்கியதை திரும்பப் பெற வேண்டும். பாரத் கெளரவ் என்ற பெயரில் 100 விரைவு ரயில்களை தனியாருக்கு விற்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரயில்வே மஸ்தூா் யூனியனின் (எஸ்.ஆா்.எம்.யூ) சேலம் கோட்டச் செயலாளா் கோவிந்தன் தலைமையில் ரயில்வே ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சமூகநீதிக் கட்சியினா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆா்இயூ) மற்றும் சிஐடியூ சாா்பில் கோவை ரயில் நிலையம் முன்பு கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், டிஆா்இயூ செயல் தலைவா் ஜானகிராமன், பொதுச்செயலாளா் வி.ஹரிலால், சிஐடியூ கோவை மாவட்ட செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் சிவஞானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.