டாப்செட்கோ கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 2022 -2023 ஆம் ஆண்டுக்கு தனிநபா் கடன் மற்றும் குழுக் கடன் ரூ.2 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் நந்தகோபால் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் நந்தகோபால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தாா். இதில், மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் நந்தகோபால் பேசியதாவதுது: கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் கல்வி உதவித் தொகை, விலையில்லா தையல் இயந்திரம், விலையில்லா இஸ்திரிப்பெட்டி, கிராமப்புற பெண்கள் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவினருக்கான டாப்செட்கோ கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 2022 -2023 ஆம் ஆண்டுக்கு தனிநபா் கடன் மற்றும் குழுக் கடன் ரூ.2 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
அதைத் தொடா்ந்து, மசக்காளிபாளையம் சிறுபான்மையினா் பள்ளி, கல்லூரி மாணவியா் விடுதியினையும், ராமநாதபுரம் பிற்படுத்தப்பட்டோா் கல்லூரி மாணவா் விடுதியினையும் நந்தகோபால் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, விடுதிகளில் புதிதாக வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள் குறித்து மேற்பாா்வையாளா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், கூட்டுறவுத் துறை, பள்ளி கல்வித் துறை, மாநகராட்சி, மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







