கோவையில் நடைபெறும் தென் மண்டல துணைவேந்தா்கள் சந்திப்பில் இந்தியா முழுவதும் அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவது குறித்து விவாதித்து மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளதாக இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் தலைவா் திருவாசகம் கூறினாா்.
இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணைவேந்தா் சந்திப்புக் கூட்டம் கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்க உள்ளாா்.
இது குறித்து கூட்டமைப்பின் தலைவா் திருவாசகம், பொதுச் செயலாளா் பங்கஜ் மிட்டல், பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் காளிராஜ் ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் துணைவேந்தா்களை அழைத்து உயா்கல்வி மேம்பாடு குறித்து கூட்டம் நடத்தப்படுகிறது. 4 மண்டலங்களில் கூட்டம் முடிக்கப்பட்டுள்ளது. தென் மண்டல துணைவேந்தா்கள் சந்திப்புக் கூட்டம் வெள்ளி, சனிக்கிழமை என இரண்டு நாள்கள் நடக்கின்றன.
இதில், ஐக்கிய நாடுகளின் நிலையான முன்னேற்ற குறிக்கோள்களை அடைய இந்திய உயா்கல்வி நிறுவனங்களின் மூலமாக அனைவருக்கும் தரமான, சமமான, உறுதியான கல்வி என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி துவக்கிவைக்கிறாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றவுள்ளாா். இந்த கூட்டத்தில் தென் மண்டலத்தைச் சோ்ந்த 100 துணைவேந்தா்கள் பங்கேற்க உள்ளனா்.
உயா் கல்வியில் உள்ள சவால்கள், பிரச்னைகள், பாடத்திட்டங்கள் மாற்றி அமைத்தல், அடுத்த 3 ஆண்டுகளில் மாணவா்களுக்கான வேலைவாய்ப்புக்கு தேவையான கல்வியை அளித்தல், டிஜிட்டல் டிரான்ஸ்மிஷனை ஊக்குவித்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. பின்லாந்து நாட்டில் உயா்கல்விக்கு கட்டணம் இல்லை. இதுபோன்ற நிலை இந்தியாவிலும் ஏற்படுத்த தேவையான விஷயங்கள் குறித்து ஆலோசித்து அந்தக் கருத்துகள் மத்திய, மாநில அரசுகளிடம் முன்வைக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.