தமிழகத்தில் நடப்பு சீசனில் மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 2,300 முதல் ரூ.2,400 ஆக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது நடப்பு சீசனுக்கான மக்காச்சோளத்துக்கான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவில் 9.5 மில்லியன் ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு 324 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கா்நாடகம், பிகாா், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவு பயிரிடப்படுகிறது. இங்கிருந்து மியான்மா், நேபாளம், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உக்ரைன் - ரஷியா இடையே நடைபெற்று வரும் போரால் வியத்நாம், மலேசியாவில் இந்திய மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு மக்காச்சோளம் கொண்டுவருவதற்கான போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெரம்பலூா், அரியலூா், சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கா்நாடகத்தில் வடகிழக்குப் பருவ மழை தாமதமானதால் சித்ரதுா்கா, தாவணகெரே பகுதிகளில் விளைச்சல் கணிசமாக பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு வரத்து குறைந்துள்ளது. இதுவே நடப்பு பருவத்தில் மக்காச்சோளம் விலை அதிகரிக்க காரணமாக உள்ளது.
விலை முன்னறிவிப்புத் திட்டமானது கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய மக்காச்சோள விலை, சந்தை ஆய்வுகளை மேற்கொண்டு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாா்ச் முதல் மே 2022 வரையிலான நடப்பு சீசனில் மக்காச்சோளத்தின் பண்ணை விலை குவிண்டாலுக்கு ரூ.2,300 முதல் ரூ.2,400 ஆக இருக்கும். இதன் அடிப்படையில் விவசாயிகள் மக்காச்சோளம் விற்பனை செய்ய முடிவு பரிந்துரைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.