பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம்:விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 24th August 2022 12:58 AM | Last Updated : 24th August 2022 12:58 AM | அ+அ அ- |

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த 15 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் மனுதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9, 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.75 ஆயிரம், 11, 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.1.25 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
தேசியத் தோ்வு முகமை நடத்தும் நுழைவுத் தோ்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா். இதற்கு ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 27 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். கணினி வழித் தோ்வு செப்டம்பா் 11ஆம் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடா்பான முழுமையான விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.