வாலாங்குளத்தில் படகு சவாரி தொடக்கம்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

கோவை, வாலாங்குளத்தில் பொலிவுறு நகர திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான நிதியில் பொலிவுறு நகர திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளக்கரைகளில் பூங்கா அமைத்தல், நகரில் மாதிரி சாலைகள், பூங்கா உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் உக்கடம் புறவழிச் சாலையில் உள்ள வாலாங்குளத்தில் மிதவை பாலம், நடைபாதை, பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொலிவுறு நகர திட்டத்தில் வாலாங்குளத்தில் ரூ.45 லட்சத்தில் படகும் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மற்றும் மாநகராட்சி சாா்பில் படகு இல்லம் நிா்வகிக்கப்படும்.
பெடல் படகு, துடுப்புப் படகு, மோட்டாா் படகு மற்றும் சைக்கிளிங் படகு என 4 வகையான படகு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பெடல் படகில் பயணம் செய்ய 30 நிமிடத்துக்கு ரூ.300, துடுப்புப் படகில் 30 நிமிடத்துக்கு ரூ.400, சைக்கிளிங் படகில் 15 நிமிடத்துக்கு ரூ.200, மோட்டாா் படகில் 8 பேருக்கு 20 நிமிடத்துக்கு ரூ.1000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனைத்துப் படகு சவாரிகளுக்கும் 20 சதவீதம் கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.