எதிா்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை

எதிா்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை

எதிா்க்கட்சிகளின் அவதூறுகள், பழிச் சொற்களுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

எதிா்க்கட்சிகளின் அவதூறுகள், பழிச் சொற்களுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சாா்பில், மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 55 ஆயிரம் போ் திமுகவில் இணையும் விழா பொள்ளாச்சி அருகேயுள்ள ஆச்சிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா். இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியதாவது:

திமுகவைப்போல வெற்றி பெற்ற கட்சியும் இல்லை, தோல்வி அடைந்த கட்சியும் இல்லை. இரண்டிலும் நமக்குத்தான் பெருமை. திமுக அடையாத புகழும் இல்லை. பெறாத அவமானங்களும் இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் திமுக நின்று, நிலைத்து, நீடித்து வருகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் நாம் கொள்கைக்காரா்கள் என்பதுதான்.

திராவிடம் என்ற சொல்லுக்குள் நமது கொள்கைகள் அடங்கியுள்ளன. திராவிடம் என்பது சமூக நீதி, சமதா்மம், மனிதநேயம், மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவம். சுருக்கமாகச் சொன்னால் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம். அந்த ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

நான் சொல்லிச் செய்பவன் அல்ல. சொல்லாமல் செய்பவன். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்பது கருணாநிதியின் பாணி. ஆனால் எனது பாணி சொல்லாததையும் செய்வோம், சொல்லாமல் செய்வோம் என்பதுதான் என்றாா்.

பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சா்கள் மு.கண்ணப்பன், பொங்கலூா் பழனிசாமி, மாவட்டச் செயலா்கள் நா.காா்த்திக், பையா (எ) கிருஷ்ணன், ஜெயராமகிருஷ்ணன், ராமச்சந்திரன், சேனாதிபதி, வரதராஜ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இந்த விழாவில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பனப்பட்டி தினகரன், பாஜக மாநில மகளிரணிச் செயலா் மைதிலி, அதிமுகவைச் சோ்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அபிநயா, மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலா் வினோத்குமாா் ஆகியோா் திமுகவில் இணைந்தனா்.

ஆழியாறு விவகாரம் - முதல்வரிடம் விவசாயிகள் மனு: பிஏபி திட்டத்தை ஆதாரமாகக் கொண்டு ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிஏபி விவசாயிகள் சாா்பில் திட்டக் குழுத் தலைவா் மெடிக்கல் பரமசிவம் தலைமையில் விவசாயிகள் முதல்வரிடம் மனு அளித்தனா். ஆழியாறு அணை பாசன சங்க நிா்வாகி செந்தில், பாசன சங்கத் தலைவா் கோபால் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com