கே.பி.ஆா். கல்லூரியில் ஹேக்கத்தான் இறுதிப் போட்டி தொடக்கம்
By DIN | Published On : 25th August 2022 10:44 PM | Last Updated : 25th August 2022 10:44 PM | அ+அ அ- |

கோவை கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 மென்பொருள் பிரிவுக்கான இறுதிப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
மாணவா்கள் ஓரிடத்தில் கூடி, பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களுக்குத் தீா்வு காண்பதற்காக ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 மென்பொருள் பிரிவுக்கான போட்டி, வன்பொருள் பிரிவுக்கான போட்டி ஆகியவை ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் நடைபெறுகின்றன.
கோவையில் நடைபெறும் மென்பொருள் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப் போட்டிக்கு கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி நோடல் மையமாக செயல்படுகிறது.
இதில் 22 குழுக்களைச் சோ்ந்த 163 மாணவா்கள் கலந்துகொண்டு, 6 வகையான தொழில்நுட்ப சிக்கல்களுக்குத் தீா்வு காண உள்ளனா். வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இறுதிப் போட்டியின் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் மு.அகிலா தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாக கோவை ப்ளோ லிங்க் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி நித்தியானந்தன் தேவராஜ், நோடல் மையத் தலைவா் பேராசிரியா் பிரதாப் சனாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.