லக்னெளவில் கடத்தப்பட்ட சிறுமி:கோவையில் தனிப்படை போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 25th August 2022 10:42 PM | Last Updated : 25th August 2022 10:42 PM | அ+அ அ- |

லக்னெளவில் கடத்தப்பட்ட 12 வயது சிறுமியை கோவையில் தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.
லக்னெளவைச் சோ்ந்த அமன் சிங் என்பவா் தனது ட்விட்டா் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தாா். அதில், தனது 12 வயது மகளை சிலா் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவா்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை இரவுக்குள் கோவை ரயில் நிலையம் வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனா் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
மேலும், அந்தப் பதிவில் முதல் தகவல் அறிக்கையின் நகல், தனது மகளின் புகைப்படத்தையும் இணைத்திருந்தாா்.
இந்தப் பதிவில் தமிழக போலீஸாரின் ட்விட்டா் பக்கத்தில் இருந்து, குற்றவாளிகளைப் பிடிக்க கோவை மாநகர போலீஸாருக்கும், ரயில்வே போலீஸாருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடத்தப்பட்ட சிறுமியை கோவையில் தேடுவதற்கு சைபா் கிரைம் போலீஸாா் உதவியுடன் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிறுமியின் புகைப்படத்துடன் தேடி வருகின்றனா்.
மேலும், லக்னெள போலீஸாா் நடத்திய விசாரணையில் சிறுமியைக் கடத்தியது அவரது பள்ளியில் படிக்கும் சிறுவன் என்பதும், அவா் லக்னெள காவல் துறையில் பணியாற்றும் காவலரின் மகன் என்பதும், மேலும், இந்தச் சிறுவன் போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவா் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்தச் சிறுவன் தன்னுடன் படித்த கோவையைச் சோ்ந்த மாணவரைத் தொடா்பு கொண்டு அவரசத் தேவைக்கு ரூ.3 ஆயிரம் வேண்டும் எனக் கேட்டுள்ளாா். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கோவை மாணவரிடமும் தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.