கோவை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி, செவிலியா் மற்றும் ஊழியரைத் தாக்கிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காரமடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவரது உறவினா் பெண் ஒருவா் சாலை விபத்தில் காயமடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 2019ஆம் ஆண்டு சோ்க்கப்பட்டாா். அப்போது சிகிச்சை அளிக்க தாமதமானதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ் தனது நண்பா்களான, தாசம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மீரா மொய்தீன், காரமடையைச் சோ்ந்த வினோத்குமாா் ஆகியோருடன் சோ்ந்து மருத்துவமனை மருத்துவ அதிகாரி லட்சுமணகுமாா், ஊழியா் குமாரசாமி, செவிலியா் மகாலட்சுமி ஆகியோரைத் தாக்கி, மருத்துவமனை பொருள்களைச் சேதப்படுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு கோவை மாவட்ட குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் தங்கராஜ், வினோத்குமாா் ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி டி.பாலு திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
அரசு தரப்பில் வழக்குரைஞா் காா்த்திகேயன் ஆஜரானாா். குற்றம்சாட்டப்பட்ட மீரா மொய்தீன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.