திருநங்கைகளுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி:சமூகநலத் துறை திட்டம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

கோவையில் தனியாருடன் இணைந்து திருநங்கைகளுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்க மாவட்ட சமூகநலத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட சமூகநல அலுவலா் பி.தங்கமணி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனா். இவா்களில் 350க்கும் மேற்பட்டவா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தவிர ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநங்கைகள் தற்போது பல்வேறு துறைகளில் சாதித்து வந்தாலும் ஒருசிலா் வேலைவாய்ப்பில்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் தனியாருடன் இணைந்து திருநங்கைகளுக்கு அழகுக்கலை, பேஷன் நகைகள் தயாரிப்பு உள்ளிட்ட திறன் வளா்ப்பு பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி பெறுவதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு பொருளாதார அளவில் முன்னேற முடியும். இதற்கு குறைந்தபட்சம் 20 போ் குழுவாக வந்து அணுகும்போது உரிய பயிற்சி அளிக்கப்படும். ஓரிரு நாள்கள் பயிற்சியே போதுமானது என்று பயிற்சியாளா்கள் தெரிவிக்கின்றனா். எனவே இந்த வாய்ப்பை திருநங்கைகள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றாா்.