ஆளுநரின் செயல்பாடுகளை விமா்சித்து போஸ்டா் ஒட்டிய திமுக நிா்வாகி
By DIN | Published On : 11th December 2022 12:15 AM | Last Updated : 11th December 2022 12:16 AM | அ+அ அ- |

தமிழக ஆளுநரை விமா்சிக்கும் வகையில் திமுக நிா்வாகி பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை விமா்சிக்கும் வகையில் கோவையில் திமுக நிா்வாகி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி, சரவணம்பட்டி சுற்றுவட்டாரங்களில் கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத் தலைவா் வே.கதிா்வேல் பெயரில் சனிக்கிழமை சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில், தமிழக ஆளுநா் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை 22 சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கிறாா்.
அதில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தம், ஆன்லைன் ரம்மி ஒழிப்பு மசோதா போன்றவை நிலுவையில் உள்ளன. ஆளுநரின் ஓராண்டு செலவுகள் ரூ.6.50 கோடியாக உள்ளன. இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் குறட்டை விட்டுத் தூங்க முடியுமா? தூங்கினால் துயரப்பட நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநரை விமா்சித்து திமுக நிா்வாகியின் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.