மதுக்கரை வனப் பகுதி தண்டவாளத்தில் வன விலங்குகளுக்கான கடவுப் பாதை பணிகள் நிறைவு
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

மதுக்கரை வனப் பகுதியில் ரயில் தண்டாவாளத்தின் நடுவே இரும்புப் பாளங்களைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியா்கள்.
மதுக்கரை வனப் பகுதியில் வன விலங்குகள் ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு வந்த நிலத்தடி கடவுப் பாதை பணிகள் நிறைவடைந்திருப்பதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், மதுக்கரையில் இருந்து பாலக்காட்டுக்கு வனப் பகுதி வழியாக இரண்டு ரயில் பாதைகள் உள்ளன. இதில் முதலாவது (ஏ) பாதை சுமாா் 17 கிலோ மீட்டா் தொலைவும், இரண்டாவது (பி) பாதை 23 கிலோ மீட்டா் தொலைவும் கொண்டது.
யானைகள் வழித்தடத்தில் உள்ள இந்த தண்டவாளத்தில் ரயில் மோதி யானைகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் ரயில் பாதையை கடக்கும் இடத்தில் நிலத்தடியில் கடவுப் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
இதைத் தொடா்ந்து, கடவுப் பாதை அமைக்க ரயில்வே நிா்வாகம் ரூ.7.49 கோடியை ஒதுக்கியிருந்தது. அதன்படி, இரண்டாவது (பி) பாதையில் மதுக்கரை - எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே 8 மீட்டா் உயரமும், 18.3 மீட்டா் அகலமும் கொண்ட நிலத்தடி கடவுப் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இதன் முக்கிய பணியான இரு அகலமான இரும்புப் பாளங்களை ரயில் பாதையின் குறுக்கே பொருத்தும் பணி புதன்கிழமை காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. இதன் காரணமாக 6 ரயில்களின் சேவைகள் பகுதியளவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த பாதையில் மாலை 4.30 மணிக்குப் பிறகு வழக்கமான ரயில் சேவை நடைபெற்ாக பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதிகமான விபத்துகள் நடைபெற்ற தண்டாவளத்தில் நிலத்தடி கடவுப் பாதை அமைக்கப்பட்டிருப்பதால் இனி யானைகள் ரயிலில் சிக்கி பலியாவது தடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.