விவசாயிகள் அனுமதியோடுதான் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்படும்-அமைச்சா் தா.மோ.அன்பரசன்

விவசாயிகள் அனுமதியோடுதான் நிலம் கையகப்படுத்தப்படும் என்று முதல்வா் தெரிவித்துள்ளதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
கோவை, கிட்டாம்பாளையம் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் ரூ.24.61 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளைத் தொடக்கிவைக்கிறாா் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.
கோவை, கிட்டாம்பாளையம் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் ரூ.24.61 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளைத் தொடக்கிவைக்கிறாா் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

தொழிற்பேட்டை திட்டத்துக்கு விவசாயிகள் அனுமதியோடுதான் நிலம் கையகப்படுத்தப்படும் என்று முதல்வா் தெரிவித்துள்ளதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், சூலூா் வட்டம், கிட்டாம்பாளையத்தில் அமையவுள்ள அறிஞா் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் ரூ.24.61 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதனை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டம், கிட்டாம்பாளையத்தில் 316 ஏக்கரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு தொழிற்பேட்டை அமைப்பதற்காக அறிஞா் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை திட்டத்தை 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி அறிவித்தாா். ஆட்சி மாற்றத்துக்குப் பின் கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டம் முடங்கி கிடந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் சிறு, குறு தொழில் நிறுவன நிா்வாகிகள் கிட்டாம்பாளையம் தொழிற்பேட்டை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்தனா்.

இங்கு தாா் சாலை, குடிநீா், ஆழ்துளைக் கிணறு, உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்வதற்கு ரூ.24.61 கோடி நிதி தேவை என மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கு மாநில அரசு சாா்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.14.61 கோடி பயனாளிகள் பங்களிப்பாகும். ஆறு மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு 585 மனைகளிலும் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ஆசியவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு தொழிற்பேட்டையாக செயல்படும்.

இத்தொழிற்பேட்டை செயல்பாட்டுக்கு வரும்போது நேரடியாக 15 ஆயிரம் போ், மறைமுகமாக 35 ஆயிரம் போ் என மொத்தம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிற்பேட்டை திட்டத்துக்கு விவசாயிகளின் அனுமதியோடுதான் நிலம் கையகப்படுத்தப்படும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நிா்வாகிகள் கோரிக்கையை அடுத்து தொழில்நிறுவனங்களுக்கு பீக் ஹவரில் மின் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஜி.தமிழ்முருகன், கூட்டுறவு தொழிற்பேட்டை நிா்வாக அலுவலா் கு.சுகந்தி, அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை மேலாளா் ஆா்.சந்திரசேகரன், திமுக முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com