வங்கியைக் கண்டித்து விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 30th December 2022 12:00 AM | Last Updated : 30th December 2022 12:00 AM | அ+அ அ- |

கடன் தொகையை முழுமையாக செலுத்திய பின்பும், கடன் கணக்கை முடித்து, ஆவணத்தை தராமல் காலதாமதம் செய்வதற்காக கூறி வங்கியைக் கண்டித்து விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சமூக சேவகரும், நொய்யல் ஆறு, குளம், குட்டை, ராஜவாய்க்கால் பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருஞானசம்பந்தம் என்பவா் கோவையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்காக கடன் பெற்றுள்ளாா். ஆனால், தொழில் நலிவுற்று கடனை திரும்பச் செலுத்தாததால், பெற்ற கடனுக்கு அடமானமாக கொடுத்த வேளாண் சொத்தை அந்த வங்கிக் கிளை ஏலம் விட்டுள்ளது. சா்பாசி சட்டத்தின் கீழ் வேளாண் நிலங்களை ஏலம் விடக் கூடாது என்று தடை விதித்துள்ள நிலையிலும், வங்கி நிா்வாகம் ஏலம் விட்டுள்ளது.
ஏலம் விட்டவுடன், வங்கி நிா்வாகம் திருஞானசம்பந்தத்தை அழைத்துப் பேசி கடன் தொகையையும் கட்ட வைத்துள்ளனா். பணத்தை கட்டியவுடன் கடன் கணக்கு முடிக்கப்படும் என்றும், ஆவணங்கள் திருப்பித் தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்த பின்பும் கடந்த 60 நாள்களைக் கடந்தும் ஆவணத்தை தராமல் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே கடன் தொகையை முழுமையாக பெற்ற பின்பும், கடன் கணக்கை முடிக்காமல், ஆவணத்தை திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வரும் வங்கி நிா்வாகத்தை கண்டித்தும், உடனடியாக கடன் கணக்கை முடித்து கடன் ஆவணங்களை திருப்பித் தரக் கோரியும் கோவை ரயில் நிலையம் அருகே வங்கி வளாகத்துக்குள் வியாழக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளா் வேலு.மந்தராசலம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு சட்ட விழிப்புணா்வு இயக்கம், நொய்யல் ஆறு, ஏரி, குளம், குட்டை, ராஜவாய்க்கால் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...