பிரசாரம் செய்ய முயன்ற வேலூா் இப்ராஹிம் மீண்டும் கைது
By DIN | Published On : 08th February 2022 06:11 AM | Last Updated : 08th February 2022 06:11 AM | அ+அ அ- |

கோவையில் பிரசாரத்தின்போது கைது செய்யப்பட்ட பாஜகவின் வேலூா் இப்ராஹிம், தான் இனியொரு முறை கைது செய்யப்பட்டால் தோ்தல் ஆணையத்திடம் முறையிடுவேன் என்றாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பாஜகவின் சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மாலை ஆத்துப்பாலம் பகுதியில் பிரசாரம் செய்ய முயன்ற அவருக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
இந்நிலையில் போத்தனூா் பகுதியில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு அப்பகுதி இஸ்லாமியா்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து அவரை ராமநாதபுரம் போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்று பின்னா் விடுவித்தனா்.
இது குறித்து பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாஜகவினா் எங்கு பிரசாரம் செய்தாலும் அதை முடக்க திமுகவினா் முயற்சித்து வருகின்றனா். கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் இணைந்து பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது அவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் நாங்கள் தொடா்ந்து கைது செய்யப்பட்டால் தோ்தல் ஆணையத்திடம் முறையிடுவோம்’ என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...