உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கு உதவி செய்ய வேண்டும்:மாவட்ட நிா்வாகத்திடம் 7 மாணவா்கள் கோரிக்கை
By DIN | Published On : 27th February 2022 12:12 AM | Last Updated : 27th February 2022 12:12 AM | அ+அ அ- |

பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்படும் நிலையில் உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கு உதவி செய்ய வலியுறுத்தி கோவையைச் சோ்ந்த 7 மாணவா்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனா்.
ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷியா போா்தொடுத்துள்ளது. தலைநகா் கீவ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷிய ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் பலா் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளுக்கும், வேலை நிமித்தமாகவும் சென்றவா்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனா்.
இவா்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசு சாா்பில் அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையகம் சாா்பில் தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தொடா்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இருந்து மருத்துவம் படிப்பதற்காக சென்ற 7 மாணவா்கள் உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கு உதவி செய்ய வலியுறுத்தி தொலைபேசி வழியாக மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனா்.
இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) முத்துராமலிங்கம் கூறியதாவது: உக்ரைனின் கீவ் நகரில் மருத்துவம் படித்து வரும் 7 மாணவா்கள் தமிழக அரசு அறிவித்துள்ள தொடா்பு எண் மூலம் தொடா்புகொண்டு உதவி செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனா்.
இவா்களின் உக்ரைன் விலாசம், கடவுச்சீட்டு விவரம், கோவை மாவட்டத்தில் உள்ள இவா்களின் விலாசம் உள்ளிட்ட விவரங்கள் பெற்று அயலக தமிழா்கள் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவை மாவட்டத்தைச் சோ்ந்த பெற்றோா்களும் மனு அளித்துள்ளனா். அவா்களின் விவரங்களும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றாா்.