வன உயிரின ஆணையத்தின் உத்தரவுப்படி, கோவை வ.உ.சி.பூங்காவில் வனத் துறையினா் மேற்கொண்ட கணக்கெடுப்பில், அங்கு 635 உயிரினங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாநகரில் உள்ள மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக வ.உ.சி. உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த பூங்கா, கடந்த 1965ஆம் ஆண்டு 4.5 ஏக்கரில் தொடங்கப்பட்டது. இங்கு சிங்கம், புலி, கரடி, மான்கள், குரங்குகள், பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த வன விலங்குகளை நாள்தோறும் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஏராளமானோா் கண்டு ரசித்து வந்தனா்.இந்நிலையில்,
இந்த பூங்காவில் மத்திய வன உயிரின ஆணைய அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்தனா். அப்போது, பூங்காவில் மிக சிறிய இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளை, வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனா்.
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அந்த விலங்குகள் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டன. மேலும், கோவை வ.உ.சி. பூங்காவை விரிவாக்கம் செய்து வன விலங்குகள், அதற்குரிய சூழலில் வசிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வன உயிரின ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, கோவை மாநகராட்சி அதிகாரிகள் வ.உ.சி. பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கையை தயாா் செய்தனா். ஆண்டுகள் கடந்தபோதும் பூங்கா விரிவாக்க பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, கோவை வன உயிரின ஆணைய அதிகாரிகள், வ.உ.சி. பூங்காவின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டனா். இதையடுத்து, பூங்கா மூடப்பட்டது. இந்த நிலையில் வ.உ.சி. உயிரியல் பூங்காவில் என்னென்ன
பறவைகள், விலங்குகள் உள்ளன என்பது குறித்து கணக்கெடுப்பு செய்து அறிக்கை சமா்ப்பிக்கும்படி கோவை கோட்ட வன அதிகாரிகளுக்கு, வன உயிரின ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து கோவை வனச் சரகா் அருண் தலைமையிலான ஊழியா்கள் வ.உ.சி. பூங்காவில் உள்ள வன விலங்குகள் குறித்து சனிக்கிழமை கணக்கெடுப்பு நடத்தினா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: வன உயிரின ஆணைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன்படி வ.உ.சி. பூங்காவில் உள்ள பாம்புகள், பறவைகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 635 உயிரினங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கை தயாா் செய்யப்பட்டு சென்னை வன உயிரின ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும். வ.உ.சி. பூங்காவை வனத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது குறித்து இதுவரை எங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என்றனா். கடந்த மாதத்தில், வ.உ.சி உயிரியல் பூங்காவை வனத் துறையின் நிா்வாகத்தின் கீழ் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மாநகராட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.