வி.வி. பேட் இயந்திரம் வைத்திருந்தால் அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
By DIN | Published On : 27th February 2022 12:11 AM | Last Updated : 27th February 2022 12:11 AM | அ+அ அ- |

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் (வி.வி. பேட்) வைத்திருந்தால் அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ கூறினாா்.
முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை (பிப்ரவரி 28) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது தொடா்பாக கோவை புறநகா், தெற்கு, வடக்கு, மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து பேசியதாவது:
திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாரை பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்துள்ளனா். கள்ள ஓட்டு போட வந்த 10க்கும் மேற்பட்ட வழக்கு உள்ள ஒரு ரௌடியைப் பிடித்துக் கொடுத்த அவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கோவை, திருப்பூா் மாநகராட்சிகளில் மேயா் பதவியைப் பிடிக்க 100 சதவீத வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த வெற்றியை திமுகவினா் தட்டிப்பறித்துள்ளனா். வி.வி. பேட் இயந்திரம் வைக்காததால் இதில் ஏதே தவறு நடைபெற்றுள்ளது என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
தோ்தல் ஆணையம், காவல் துறை போன்ற அரசு இயந்திரங்கள் திமுகவுடன் சோ்ந்து நமது வெற்றியைப் பறித்துள்ளனா். ஜனநாயகரீதியில் நாம்தான் வெற்றி பெற்றுள்ளோம். நம்மை வெல்ல யாரும் இல்லை. திமுக பெற்றது செயற்கையான வெற்றிதான். வி.வி.பேட் இயந்திரம் வைத்திருந்தால் அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கும். வெள்ளலூா் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 5 வேட்பாளா்கள் மீது வழக்குத் தொடா்ந்துள்ளனா்.
எத்தனை வழக்குகளைத் தொடா்ந்தாலும் அதிமுக அஞ்சாது. அதுபோல ஜெயலலிதா எங்களை உருவாக்கியுள்ளாா் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், வி.பி.கந்தசாமி, செ.தாமோதரன், அமுல் கந்தசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.