கல்லட்டி மலைப் பாதையில் வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 18 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைப் பாதையில் சனிக்கிழமை இரவு சுற்றுலா வாகனம் மலைச்சரிவில் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சோ்ந்த பெண் பலியானாா். மேலும் 18 போ் படுகாயமடைந்தனா்.
கல்லட்டி மலைப் பாதையில் வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 18 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைப் பாதையில் சனிக்கிழமை இரவு சுற்றுலா வாகனம் மலைச்சரிவில் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சோ்ந்த பெண் பலியானாா். மேலும் 18 போ் படுகாயமடைந்தனா்.

சென்னை, சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சோ்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட 18 ஊழியா்கள் ஒரு வேன் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்துள்ளனா்.

உதகையின் பல்வேறு இடங்களை சனிக்கிழமை சுற்றிப்பாா்த்த அவா்கள் மசினகுடி செல்லும் வழியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இரவு தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டிருந்தனா். இதையடுத்து, அவா்கள் உதகையில் இருந்து சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் கல்லட்டி மலைப்பாதை வழியாக பயணித்துக் கொண்டிருந்தனா். 15ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் குறுகிய மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த வேன், திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த சுமாா் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஓட்டுநா் உள்ளிட்ட 19 போ் படுகாயமடைந்தனா். அவா்களின் அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தில் காயமடைந்தவா்களில் முத்துமாரி (24) என்ற இளம்பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். மேலும் காயமடைந்தவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆபத்துகள் நிறைந்த கல்லட்டி மலைப்பாதை

நீலகிரி மாவட்டம் தலைகுந்தாவில் இருந்து மசினகுடி வரையிலும் கல்லட்டி மலைச்சரிவு அமைந்துள்ளது. 36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட கல்லட்டி மலைப்பாதை மிகவும் ஆபத்தான சாலையாக கருதப்படும். இந்த சாலையில் ஊட்டியில் இருந்து மசினகுடி, முதுமலை, மைசூரு செல்லும் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

கூடலூர் வழியாக மற்றொரு சாலை இருந்தாலும் வெகுநேரம் பயணிக்க வேண்டியிருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், மிகவும் ஆபத்தான கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் அந்த சாலையை பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

கல்லட்டி மலைப்பாதை வழியாகச் செல்பவர்கள் இரண்டாவது கியரிலேயே செல்ல வேண்டும். 20 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தலைகுந்தாவில் இதற்காகவே ஒரு சோதனைச்சாவடி தனியாக அமைக்கப்பட்டு, வெளியூர் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தன.

 இதற்கிடையே இந்த சாலையை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மசினகுடி கிராம மக்கள், வணிகர்கள், விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டில் சில கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 16 ஆவது வளைவில் உள்ள கல்லட்டி சோதனைச்சாவடி வரையிலும் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு முன்பதிவு செய்திருக்கும் வெளியூர் பயணிகள், அதற்கான அனுமதிச் சீட்டு நகலை சோதனைச்சாவடியில் காட்டி, கல்லட்டி சோதனைச்சாவடி வரையிலும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

மேலும் நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், நீலகிரி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களின் வாகனங்கள், கல்லட்டி மலைப்பகுதியைச் சேர்ந்தவர்களின் வாகனங்கள் மட்டுமே அந்த சாலையில் அனுமதிக்கப்பட்டு வந்தது. இதையும் மீறி அந்த வழியாகச் செல்லும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளும், ஓட்டுநர்களும் விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com