கோவையில் திடீரென பெய்த பலத்த மழை
By DIN | Published On : 31st July 2022 12:42 AM | Last Updated : 31st July 2022 12:42 AM | அ+அ அ- |

கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீருக்கிடையே செல்லும் வாகன ஓட்டிகள்.
கோவையில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி கடந்த சில வாரங்களாக பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கடந்த ஒருவாரமாக மழையில்லாமல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது.
காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூா், பீளமேடு, கணபதி, ரயில் நிலையம், குனியமுத்தூா், சுந்தராபுரம், போத்தனூா், பேரூா், வடவள்ளி, தொண்டாமுத்தூா், நஞ்சுண்டாபுரம், கவுண்டம்பாளையம், சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, துடியலூா், சரவணம்பட்டி, விளாங்குறிச்சி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் நகரின் முக்கிய பகுதிகளான லட்சுமி மில் சந்திப்பு, ரயில் நிலையம் லங்கா காா்னா், ராமநாதபுரம் சந்திப்பு, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீா் தேங்கியது. நஞ்சுண்டாபுரம் சாலையில் மழைநீருடன் கழிவுநீா் கலந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கும் திரும்பும் வேளையில் பெய்த பலத்த மழையால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினா். சாலையோரங்களில் தேங்கி நின்ற மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா். கோவையில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீா் மழையால் இதமான காலநிலை காணப்பட்டது.