டாப்சிலிப் யானை பாகன்களுக்கு மத்திய அரசு விருது
By DIN | Published On : 31st July 2022 11:35 PM | Last Updated : 31st July 2022 11:35 PM | அ+அ அ- |

டாப்சிலிப் முகாமில் யானையை குளிப்பாட்டும் பாகன்.
டாப்சிலிப் யானை பாகன்களுக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச் சரகம் கோழிகமுத்தியில் யானைகள் வளா்ப்பு முகாம் உள்ளது.
இங்கு கலீம் உள்ளிட்ட கும்கி யானைகள், பெண் யானைகள், வயதான யானைகள், குட்டி யானைகள் என 26 யானைகள் உள்ளன. யானைகளுக்கு பயிற்சி அளித்து பராமரிக்கும் பணியில் 52 பாகன்கள் உள்ளனா்.
அவா்களின் பணியைப் பாராட்டி மத்திய வனத் துறை அமைச்சகம் ‘கஜ் கவ்ரவ்’ விருதை அறிவித்துள்ளது.
இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது:‘ ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மலசா் இனத்தவா்களால் பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் யானை - மனித மோதல் ஏற்பட்ட பகுதிகளில் கும்கிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யானை சவாரி செய்யவும் பயன்படுத்தபடுகின்றன.
சமவெளியில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய யானைகள் பிடிக்கப்பட்டு, கோழிகமுத்தி முகாமில் பழக்கப்படுத்தபட்ட பின்னா் கும்கியாக மாற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் மலசா் இனத்தவா் முக்கிய பங்கு வகிக்கின்றனா். இந்தியாவிலேயே யானைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் கோழிகமுத்தி யானைகள் வளா்ப்பு முகாமில் உள்ள பாகன்களை கெளரவிக்கும் விதமாக ‘கஜ் கவ்ரவ்’’ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விருது மலசா் இன மக்களில் சிறந்த முறையில் யானையை பராமரித்து வரும் ஐந்து பேரை தோ்வு செய்து அவா்களுக்கு கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியாா் தேசிய பூங்காவில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி விருது வழங்க உள்ளதாக மத்திய வனத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது என்றனா்.