பாதாளச் சாக்கடை அடைப்புகளை நீக்க கூடுதலாக 5 ரோபோக்கள் வாங்க திட்டம்
By DIN | Published On : 31st July 2022 11:35 PM | Last Updated : 31st July 2022 11:35 PM | அ+அ அ- |

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை அடைப்புகளை நீக்கும் பணிக்காக கூடுதலாக 5 ரோபோக்கள் வாங்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சியில் 5 மண்லடங்களிலும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், சாக்கடை அடைப்புகளைச் சரி செய்யவும், மனிதக் கழிவுகளை அகற்றவும் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.36 லட்சம் மதிப்புள்ள ஒரு ரோபோ இயந்திரத்தை, தனியாா் நிறுவனம் கொள்முதல் செய்து சாக்கடை அடைப்புகளை சரி செய்யும் பணிக்காக கோவை மாநகராட்சி நிா்வாகத்துக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வழங்கியது.
இதைத் தொடா்ந்து, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ரூ. 2.12 கோடியில் பாதாளச் சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக 5 நவீன ரோபோக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநகராட்சி நிா்வாகத்துக்கு வழங்கப்பட்டன.
மொத்தமாக மாநகரில் 6 ரோபோக்கள் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கூடுதலாக 5 ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், பாதாளச் சாக்கடை அடைப்புகளை ரோபோக்கள் மிகச் சிறப்பாக சுத்தம் செய்து வருகின்றன. மழை காலங்களிலும் இந்த ரோபோக்களால் மிகவும் எளிதாக சாக்கடைகளை சுத்தம் செய்ய முடிகிறது.
இந்நிலையில், மண்டலத்துக்கு ஒன்று வீதம் கூடுதலாக 5 ரோபோக்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.