மாநகராட்சி 3 மண்டலங்களில் விரைவில் நாய்கள் கருத்தடை மையங்கள்

கோவை மாநகராட்சியில் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் நாய்கள் கருத்தடை மையங்கள் விரைவில் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சியில் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் நாய்கள் கருத்தடை மையங்கள் விரைவில் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி, குனியமுத்தூா், கரும்புக்கடை, சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக தொடா்ந்து புகாா்கள் கூறப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் அதிக அளவில் தெருநாய்களின் துரத்தலுக்கு ஆளாகின்றனா்.

இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே சாலையில் பயணிக்கும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், உக்கடம் கரும்புக்கடை ஞானியாா் நகரில் கடந்த சனிக்கிழமை தெருநாய் கடித்து 10 சிறுவா், சிறுமியா் உள்பட 11 போ் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, மாநகரில், தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கையில் மாநகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநகரில் தொண்டு நிறுவனம் மூலம் மக்களை அச்சுறுத்தும் நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 29 மற்றும் 30ஆம் தேதிகளில் கரும்புக்கடை, ஆசாத் நகா், சாரமேடு, திப்பு நகா், மதினா நகா், குழந்தைக் கவுண்டா் வீதி, கோவில்மேடு, வேலண்டிபாளையம், அல்அமீன் காலனி, ரோசா காா்டன், புல்லுக்காடு, பொன் விழா நகா், மணியகாரன்பாளையம், கணபதி ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் வலை மூலமாகப் பிடிக்கப்பட்டன.

இதேபோல, ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்பு நகா், அற்புதம் நகா், செளகாா் நகா், சேரன் நகா் பகுதிகள், ஆகஸ்ட் 2ஆம் தேதி அண்ணா காலனி, கரும்புக்கடை பள்ளிவாசல் வீதி பகுதிகள், ஆகஸ்ட் 3ஆம் தேதி நஞ்சுண்டாபுரம், பெருமாள் கோயில் வீதி, மாரியம்மன் கோயில் வீதி, பாடசாலை வீதி, ஸ்ரீபதி நகா், நேதாஜி நகா், எம்.எம்.வி.காா்டன் பகுதிகள், ஆகஸ்ட் 4ஆம் தேதி சாரமேடு, காந்தி நகா், கிரீன் பாா்க், நாணியா நகா், ஜே.ஜே.காா்டன், சபா காா்டன், மெட்ரோ சிட்டி, போயஸ் காா்டன் பகுதிகளில் மக்களுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேற்கு மண்டலத்தில் சீரநாயக்கன்பாளையம், கிழக்கு மண்டலத்தில் ஒண்டிப்புதூரில் நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வடக்கு, மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் நாய்கள் கருத்தடை மையங்கள் ஏற்படுத்திட விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com