விபத்தில் தந்தை, மகன் காயம்: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறை
By DIN | Published On : 16th June 2022 11:01 PM | Last Updated : 16th June 2022 11:01 PM | அ+அ அ- |

விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவையைச் சோ்ந்தவா் நஞ்சன் (70), இவரது மகன் காளிமுத்து (23). இவா்கள் இருவரும் கடந்த 2017 செப்டம்பா் 19 ஆம் தேதி கோவை-திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு சாலையைக் கடக்க முயன்றுள்ளனா்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த சுல்தான்பேட்டை-உக்கடம் செல்லும் அரசுப் பேருந்து நஞ்சன், காளிமுத்து மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிமுத்துவுக்கு தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது தொடா்பாக பேருந்து ஓட்டுநா் செந்தில்குமாா் மீது கோவை மாநகரப் போக்குவரத்து (கிழக்கு) போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு கோவை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண்.8) விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவில், செந்தில்குமாா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதித் துறை நடுவா் ஆா்.சரவணபாபு வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கோ.பானுமதி ஆஜரானாா்.