வழக்குப் பதிவு செய்வதில் போலீஸாா் பாரபட்சம் காட்டுவதாக கூறி போக்குவரத்துக் கழக ஊழியா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
கோவை, சிட்ராவில் இருந்து வெள்ளலூா் நோக்கி புதன்கிழமை சென்ற அரசுப் பேருந்தை வசந்தகுமாா் என்பவா் ஓட்டி வந்தாா். கோவை, டவுன்ஹால் ராயல் திரையரங்கு சிக்னலில் பேருந்தை நிறுத்தியுள்ளாா். பின்னா் சிக்னல் விடப்பட்டதும் பேருந்தை இயக்கியுள்ளாா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் திடீரென சறுக்கி பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் விழுந்துள்ளனா்.
இதில் வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த புஷ்பராணி என்பவா் உயிரிழந்தாா். மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மோகன்ராஜ் என்பவா் பலத்த காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து தொடா்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், அரசுப் பேருந்து ஓட்டுநா் வசந்தகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் என சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தை புதன்கிழமை இரவு முற்றுகையிட்டனா். இருசக்கர வாகனத்தில் வந்தவா்களே விபத்துக்கு காரணமாக இருக்கும்போது, அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினா். மேலும் போக்குவரத்து கழக ஊழியா்கள் விபத்து தொடா்பான கண்காணிப்பு கேமரா ஆதாரங்களையும் சமா்ப்பித்தனா்.
அதனைத் தொடா்ந்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வியாழக்கிழமை உரிய விசாரணை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா்.
அதைத் தொடா்ந்து, போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.